சைவ வினாவிடை முதறபுத்தகம்
ஆறுமுக நாவலர்
--------------------------------------------
உ
சிவமயம்
சைவ வினாவிடை
முதறபுத்தகம்
யாழ்ப்பாணத்து நல்லூர்
சிறீலசிறீ ஆறுமுகநாவலரவர்கள்
செய்தது.
வெளியீடு:
சைவ பரிபாலன சபை
யாழ்ப்பாணம்
1978
-----------------------------------------------------
உ
சிவமயம்
1. கடவுள் இயல்
1. உலகத்துக்குக் கருத்தா யாவர்?
சிவபெருமான்.
2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்?
என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்.
3. சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யுந் தொழில்கள் யாவை?
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றுமாம்.
4. சிவபெருமான் இந்த மூன்று தொழில்களையும் எதைக் கொண்டு செய்வார்?
தமது சத்தியைக் கொண்டு செய்வார்.
5. சத்தி என்னுஞ் சொல்லுக்குப் பொருள் யாது?
வல்லமை.
6. சிவபெருமானுக்குச் சத்தி யாவர்?
உமாதேவியார்.
7. சிவபெருமானுடைய திருகுமாரர்கள் யாவர்?
விநாயகக் கடவுள், வைரவக் கடவுள், வீரபத்திரக் கடவுள், சுப்பிரமணியக் கடவுள்
என்னும் நால்வர்.
8. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் பொருட்டு உமாதேவியாரோடும்
எழுந்தருளி இருக்கும் முக்கிய ஸ்தானம் யாது?
திருகைலாச மலை
9. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு எவ்விடங்களிலே நின்று அருள் செய்வார்?
சிவலிங்கம் முதலாகிய திருமேனிகளிடத்திலும், சைவாசாரியர் இடத்திலும்,
சிவனடியார் இடத்திலும் நின்று அருள் செய்வார்.
---------------------------------------------
2. புண்ணிய பாவ இயல்
1. சிவபெருமான் ஆன்மாகளுக்காக அருளிச் செய்த முதனூல்கள் எவை?
வேதம், சிவாகமம் இரண்டுமாம்.
2. வேத சிவாகமங்களில் விதிக்கப்பட்டவைகள் எவைகள்?
புண்ணியங்கள்.
3. புண்ணியங்கள் ஆவன யாவை?
கடவுளை வழிபடுதல், தாய் தகப்பன், உபாத்தியாயர், குரு முதலாகிய பெரியோர்களை
வணங்குதல், உயிர்களுக்கு இரங்குதல், உண்மை பேசுதல், செய்ந்நன்றி அறிதல்
முதலானவைகள்.
4. புண்ணியங்கள் செய்தவர் எதனை அனுபவிப்பர்?
மேல் உலகங்களாகிய புண்ணிய லோகங்களிலே போய், இன்பத்தை அனுபவிப்பர்.
5. வேத சிவாகமங்களிலே விலக்கப்பட்டவைகள் எவைகள்?
பாவங்கள்.
6. பாவங்கள் ஆவன யாவை?
கொலை, களவு, கள்ளுக் குடித்தல், மாமிசம் புசித்தல், பொய் பேசுதல்,
வியபிசாரம், சூதாடுதல் முதலானவைகள்.
7. பாவங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்?
நரகங்களிலே விழுந்து, துன்பத்தை அநுபவிப்பர்.
--------------------------------------------------
3. விபூதி இயல்-1
1. சிவபெருமானை வழிபடுஞ் சமயத்துக்குப் பெயர் யாது?
சைவசமயம்.
2. சைவசமயிகள் சரீரத்திலே ஆவசியமாகத் தரிக்க வேண்டிய அடையாளம் யாது?
விபூதி.
3. விபூதி ஆவது யாது?
பசுவின் சாணத்தை அக்கினியாலே சுடுதலால் உண்டாக்கிய திருநீறு.
4. எந்த நிற விபூதி தரிக்கத் தக்கது?
வெள்ளை நிற விபூதி.
5. விபூதியை எதில் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்?
பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்.
6. விபூதியை எந்தத் திக்குமுகமாக இருந்துகொண்டு தரித்தல் வேண்டும்?
வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்.
7. விபூதியை எப்படி தரித்தல் வேண்டும்?
நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து 'சிவசிவ' என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியிலே தரித்தல் வேண்டும்.
8. விபூதி நிலத்திலே சிந்தினால் யாது செய்தல் வேண்டும்?
சிந்திய விபூதியை எடுத்துவிட்டு, அந்த இடத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.
9. நடந்து கொண்டாயினும், கிடந்துகொண்டாயினும் விபூதி தரிக்கலாமா?
தரிக்கல் ஆகாது.
10. எக்காலங்களிலே விபூதி ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்?
நித்திரை செய்யப் புகும் போதும், நித்திரை விட்டெழுந்த உடனும், தந்த சுத்தம் செய்த உடனும், சூரியன் உதிக்கும் போதும், அத்தமிக்கும் போதும், ஸ்நானஞ் செய்த உடனும், போசனத்துக்குப் போம் போதும், போசனஞ் செய்த பின்னும் விபூதி ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்.
11. ஆசாரியர் ஆயினும், சிவனடியார் ஆயினும் விபூதி தந்தால், எப்படி வாங்கல் வேண்டும்?
மூன்று தரம் ஆயினும், ஐந்து தரம் ஆயினும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி வாங்கல் வேண்டும்.
12. விபூதி வாங்கித் தரித்துக் கொண்ட பின் யாது செய்தல் வேண்டும்?
முன் போல் மீண்டும் நமஸ்கரித்தல் வேண்டும்.
13. சுவாமி முன்னும், குரு முன்னும், சிவனடியார் முன்னும் எப்படி நின்று விபூதி தரித்தல் வேண்டும்?
முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும்.
14. விபூதி தாரணம் எத்தனை வகைப்படும்?
உத்தூளனம், திரிபுண்டரம் என இரண்டு வகைப்படும்.
( உத்தூளனம் = நீர் கலவாது, திரிபுண்டரம் =மூன்று குறி)
15. திரிபுண்டரந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?
சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப் புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறுமாம்.
இவைகளுள், விலாப் புறம் இரண்டையும் நீக்கிக் காதுகள் இரண்டையும் கொள்வதும் உண்டு. முழங்கைகளையும் மணிக்கட்டுகளையும் நீக்கிப் பன்னிர்ண்டு தானங் கொள்வதும் உண்டு.
16. திரிபுண்டரந் தரிக்கும் இடத்து, நெற்றியில் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?
இரண்டு கடைப்புருவ எல்லைவரையுந் தரித்தல் வேண்டும், அதிற் கூடினாலுங் குறைந்தாலுங் குற்றமாம்.
17. மார்பிலும் புயங்களிலும் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?
அவ்வாறங்குல நீளந் தரித்தல் வேண்டும்.
(அங்குலம் = 2.5 செ.மீ)
18. மற்றைத் தானங்களில் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்.
ஒவ்வோர் அங்குல நீளந் தரித்தல் வேண்டும்.
19. மூன்று குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?
ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டல் ஆகாது.
------------------------------------------------------
4. சிவ மூலமந்திர இயல்
1. சைவசமயிகள் நியமமாகக் செபிக்க வேண்டிய சிவமூலமந்திரம் யாது?
ஸ்ரீபஞ்சாக்ஷரம்.(திருவைந்தெழுத்து).
2. ஸ்ரீபஞ்சாக்ஷர செபஞ் செய்தற்கு யோக்கியர் ஆவார் யாவர்?
மது பானமும், மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய், சிவதீ?க்ஷ பெற்றவராய் உள்ளவர்.
3. ஸ்ரீபஞ்சாக்ஷரத்திலே எத்தனை உரு நியமமாகச் செபித்தல் வேண்டும்?
நூற்றெட்டு உருவாயினும், பத்து உருவாயினும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.
4. எந்த திக்குமுகமாக இருந்து செபித்தல் வேண்டும்?
கிழக்கு முகமாகவேனும், வடக்கு முகமாகவேணும் இருந்து செபித்தல் வேண்டும்.
5. எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?
முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத்தொடையின் உள்ளே வலபுறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்ந்திருந்து கொண்டு, செபித்தல் வேண்டும்.
6. எப்படி இருந்து செபிக்கல் ஆகாது?
சட்டை இட்டுக்கொண்டும், தலையிலே வேட்டி கட்டிக் கொண்டும், போர்த்துக்கொண்டுஞ் செபிக்கல் ஆகாது.
7. செபஞ் செய்யும் பொழுது மனம் எங்கே அழுந்திக் கிடத்தல் வேண்டும்?
சிவபெருமான் இடத்திலே அழுந்திக் கிடத்தல் வேண்டும்.
8. நிற்கும் பொழுதும், நடக்கும்பொழுதும், இருக்கும் பொழுதும், கிடக்கும் பொழுதும், மற்றை எத்தொழிலைச் செய்யும் பொழுதும் மனசை எதிலே பதித்தல் வேண்டும்?
உயிருக்கு உயிராகிய சிவபெருமானுடைய திருவடிகளிலேயே மனசைப் பதித்தல் வேண்டும்.
9. மரிக்கும் பொழுது எப்படி மரித்தல் வேண்டும்?
வேறு ஒன்றிலும் பற்று வையாது, சிவபெருமான் இடத்திலே பற்று வைத்து, தமிழ் வேதத்தைக் கேட்டுக் கொண்டும் ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டும் மரித்தல் வேண்டும்.
--------------------------------------------------------
12. நித்திய கரும இயல்
1. நாடோறும் நியமமாக எந்த நேரத்தில் நித்திரை விட்டெழுதல் வேண்டும்?
சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே நித்திரை விட்டெழுதல் வேண்டும்.
2. நித்திரை விட்டெழுந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
விபூதி தரித்துச் சிவபெருமானைத் தோத்திரஞ் செய்து கொண்டு பாடங்களைப் படித்தல் வேண்டும்.
மலசமோசனம்
3. அதற்குப் பின் யாது செய்யத் தக்கது?
மலசல மோசனஞ் செய்யத்தக்கது.
4. எவ்விடத்தில் மலசலங் கழித்தல் வேண்டும்?
திருக்கோயிலுக்குத் தூரமாய் உள்ள தனி இடத்தில் மலசலங் கழித்தல் வேண்டும்.
5. எவ்விடத்தில் மலசலங் கழித்தல் ஆகாது?
வழியிலும், குழியிலும், நீர்நிலைகளிலும், நீர்க்கரையிலும், கோமயம் உள்ள இடத்திலும், சுடுகாட்டிலும், பூந்தோட்டத்திலும், மரநிழலிலும், உழுத நிலத்திலும், அறுகம் பூமியிலும், பசு மந்தை நிற்கும் இடத்திலும், புற்றிலும், அருவி பாயும் இடத்திலும், மலையிலும், மலசலங் கழித்தல் ஆகாது.
6. எந்தத் திக்குமுகமாக இருந்து கொண்டு மலசலங் கழித்தல் வேண்டும்?
பகலிலே வடக்கு முகமாகவும், இரவிலே தெற்கு முகமாகவும் இருந்து கொண்டு மலசலங் கழித்தல் வேண்டும்.
7. எப்படி இருந்து மலசலங் க்ழித்தல் வேண்டும்?
தலையயுங் காதுகளையும் வஸ்திரத்தினாலே சுற்றி, மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்து மலசலங் கழித்தல் வேண்டும்.
சௌசம்
8. மலசலங் கழித்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
எழுந்து, சலக்கரையை அடைந்து, சலத்துடன் ஒரு சாணுக்கு இப்பால் இருந்து கொண்டு சௌசஞ் செய்தல் வேண்டும்.
9. சௌசம் எப்படி செய்தல் வேண்டும்?
மண்ணுஞ் சலமும் கொண்டு, இடக்கையினாலே குறியில் ஒரு தரமும், குதத்தில் ஐந்து தரதிற்கு மேலும், இடக்கையை இடையிடயே ஒருதரமும், பின்னும் இடக்கையை பத்துத் தரமும், இரண்டு கையையுஞ் சேர்த்து ஏழு தரமுஞ் சுத்தி செய்து, சகனத்தைத் துடைத்து கால்களை முழங்கால் வரையும், கைகளை முழங்கை வரையும் ஒவ்வொரு தரங் கழுவுதல் வேண்டும்.
10.இப்படி செய்தபின் யாது செய்தல் வேண்டும்?
அவ்விடத்தை விட்டு வேறொரு துறையிலே போய், வாயையும், கண்களையும், நாசியையும், காதுகளையும், கை கால்களில் உள்ள நகங்களையுஞ் சுத்தி செய்து, எட்டுத் தரஞ் சலம் வாயிற்கொண்டு, இடப்புறத்திலே கொப்பளித்தல் வேண்டும்.
11.வாய் கொப்ப்ளித்த பின் யாது செய்தல் வேண்டும்?
தலைக்கட்டு இல்லாமல் மூன்று முறை ஆசமனஞ் செய்தல் வேண்டும்.
12.ஆசமனம் எப்படி செய்தல் வேண்டும்?
வலக்கையை விரித்துப் பெருவிரலையுஞ் சிறுவிரலையும் பிரித்துவிட்டு, பெருவிரல் அடியில் சார்ந்த உழுந்தமிழ்ந்து சலத்தை ஆசமித்தல் வேண்டும்.
13.சௌசத்துக்குச் சமீபத்தில் சலம் இல்லையானால் யாது செய்தல் வேண்டும்?
பாத்திரத்திலே சலம் கொண்டு, ஓரிடத்தில் வைத்துக் கொண்டு, மலசலங் கழித்து சௌசஞ் செய்து விட்டு பாத்திரத்தைச் சுத்தி செய்து, சலங்கொண்டு, வாய் கொப்ப்ளித்துக் கால் கழுவுதல் வேண்டும்.
தந்த சுத்தி
14.சௌசத்துக்குப் பின் யாது செய்யத்தக்கது?
தந்தசுத்தி செய்யத் தக்கது.
15.எதனாலே தந்த சுத்தி செய்தல் வேண்டும்?
சலத்தினாலே கழுவப் பெற்ற பற்கொம்பினாலேனும், இலையினாலுலேனுந் தந்த சுத்தி செய்தல் வேண்டும்.
16.எந்தத் திக்கு முகமாக இருந்து தந்த சுத்தி செய்தல் வேண்டும்?
கிழக்கு முக்மாகவேனும், வடக்கு முகமாகவேனும், இருந்து தந்த சுத்தி செய்தல் வேண்டும்.
17.தந்த சுத்தி எப்படி செய்தல் வேண்டும்?
பல்லின் புறத்தேயும் உள்ளேயும் செவ்வையாகச் சுத்தி செய்து, ஒரு கழியை இரண்டாகப் பிளந்து, அவற்றினாலே நாக்கை வழித்து இடப்புறத்திலே போட்டு விட்டு, சலம் வாயிற் கொண்டு பன்னிரண்டு தரம் இடப்புறத்திலே கொப்பளித்து, முகத்தையுங் கை கால்களையுங் கழுவுதல் வேண்டும்.
18.நின்று கொண்டாயினும் இருந்து கொண்டாயினும் தந்த சுத்தி பண்ணலாமா?
பண்ணல் ஆகாது.
ஸ்நானம்
19.தந்த சுத்திக்குப்பின் யாது செய்யத்தக்கது?
ஸ்நானஞ் செய்யத்தக்கது.
20.ஸ்நானஞ் செய்யத்தக்க நீர் நிலைகள் யாவை?
ஆறு, ஓடை, குளம், கேணி, மடம் முதலியவையாம்.
21.ஸ்நானஞ் செய்யுமுன் யாது செய்தல் வேண்டும்?
கௌபீனத்தைக் கசக்கிப் பிழிந்து தரித்து, இரண்டு கைகளையும் கழுவி, வேட்டியைத் தோய்த்து அலம்பித் தரித்து, உடம்பைச் சலத்தினாலே கழுவி, செவ்வையாகத் தேய்த்துக் கொள்ளல் வேண்டும்.
22.எவ்வளவினதாக ஆகிய சலத்தில் இறங்கி ஸ்நானஞ் செய்தல் வேண்டும்?
தொட்பூழ் அளவினதாகிய சலத்திலே இறங்கி ஸ்நானஞ் செய்தல் வேண்டும்.
23.எந்த திக்கு முகமாக நின்று ஸ்நானஞ் செய்தல் வேண்டும்?
நதியிலே ஆனால் அதற்கு எதிர்முகமாக நின்றும், குளம் முதலியவற்றிலே ஆனால் வடக்கு முகமாகவேனும் நின்றும் ஸ்நானஞ் செய்தல் வேண்டும்.
24.சலத்திலே எப்படி முழுகல் வேண்டும்?
ஆசமனஞ் செய்து, இரண்டு காதுகளையும் இரண்டு பெருவிரல்களினாலும், இரண்டு கண்களையும் இரண்டு கட்டு விரல்களினாலும், இரண்டு நாசிகளையும் இரண்டு நடுவிரல்களினாலும் மூடிக் கொண்டு சிவபெருமானைச் சிந்தித்து முழுகல் வேண்டும்.
25.இப்படி முழுகின உடனே யாது செய்தல் வேண்டும்?
ஆசமனஞ் செய்து கொண்டு, கரையில் ஏறி, வேட்டியைப் பிழிந்து தலையில் ஈரத்தைத் துவட்டி, உடனே நெற்றியில் விபூதி தரித்து, உடம்பில் உள்ள ஈரத்தைத் துவட்டிக் குடுமியை முடித்து, ஈரக் கௌபீனத்தைக் களைந்து, உலர்ந்த கௌபீனத்தைத் தரித்து, இர்ண்டு கைகளையுங் கழுவி, உலர்ந்த வஸ்திரத்தைத் தரித்துக்கொண்டு, ஈர வஸ்திரத்தையும் கௌபீனத்தையும் உலரும்படி கொடியிலே போடவேண்டும்.
26.சிரஸ்நானஞ் செய்ய இயலாதவர் யாது செய்தல் வேண்டும்?
கண்ட ஸ்நானமேனும், கடிஸ்நானமேனுஞ் செய்தல் வேண்டும்.
27.கண்ட ஸ்நானம் ஆவது யாது?
சலத்தினாலே கழுத்தின் கீழே கழுவி, கழுவாது எஞ்சிய உடம்பை நனைந்த வஸ்திரத்தினாலே ஈரம் படிம்படி துடைப்பது.
28.கடி ஸ்நானமாவது யாது?
சலத்தினாலே அரையின் கீழே கழுவி, கழுவாது எஞ்சிய உடம்பை நனைந்த வஸ்திரத்தினாலே ஈரம் படும்படி துடைப்பது.
அநுட்டானம்
29.ஸ்நானத்துக்குப்பின் யாது செய்தல் வேண்டும்?
சுத்த சலம் கொண்டு அநுட்டனம் பண்ணி பஞ்சாக்ஷர செபஞ் செய்து தோத்திரம் பண்ணல் வேண்டும்.
போசனம்
30.அநுட்டானத்திற்குப்பின் யாது செய்யத்தக்கது?
போசனஞ் செய்யத்தக்கது.
31.போசன பந்திக்கு யோக்கியர் ஆவார் யாவார்?
மதுபானமும், மாமிச போசனமும் இல்லாதவராகவும், சமசாதியாராயும், ஆசாரம் உடையவராயும் உள்ளவர்.
32.எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?
தாழ்ந்த சாதியார் இடத்திலும், கள்ளுக் குடிப்பவர் இடத்திலும், மாமிசம் புசிப்பவர் இடத்திலும், ஆசாரம் இல்லாதவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.
33. இவர்கள் காணும்படி போசனம் பண்ணலாமா?
போசனம் பண்ணல் ஆகாது.
34.எவ்வகைப்பட்ட தானத்தில் இருந்து போசனம் பண்ணல் வேண்டும்?
கோமயத்தினாலே மெழுகப்பட்ட தானத்தில் இருந்து போசனம் பண்ணல் வேண்டும்.
35.போசனத்துக்கு உரிய பாத்திரங்கள் யாவை?
வாழையிலை, பலாவிலை, புன்னையிலை, பாதிரியிலை, தாமரையிலை என்பனவாகும்.
36. போசன பாத்திரங்களை யாது செய்தபின் போடல் வேண்டும்?
சலத்தினாலே நன்றாகக் கழுவியபின் போடல் வேண்டும்.
37.வாழையிலையை எப்படிப் போடல் வேண்டும்?
தண்டு உரியாமல் அதனுடைய அடி வலப்பக்கத்திலே பொருந்தும்படி போடல் வேண்டும்.
38. இலை போட்ட பின் யாது செய்ய வேண்டும்?
அதிலே சலத்தினாலே பரோஷித்து, லவணம், கறி, அன்னம், பருப்பு, நெய் இவற்றைப் படைத்தல் வேண்டும்.
39. போசனம் பண்ணும் போது எப்படி இருத்தல் வேண்டும்?
வீண்வார்த்தை பேசாமலும், சிரியாமலும், தூங்காமலும், அசையாமலும், கால்களை மடக்கிக் கொண்டு செவ்வையாக இருத்தல் வேண்டும்.
40. போசனம் எப்படிப் பண்ணல் வேண்டும்?
அன்னத்திலே பிசையத்தக்க பாகத்தை வலக்கையினாலே வலப்பக்கத்திலே வேறகப் பிரித்துப் பருப்பு, நெய்யோடு பிசைந்து சிந்தாமல் புசித்தல் வேண்டும். அதன்பின் சிறிது முன்போல் பிரித்து, புளிக்கறியோடு ஆயினும் இரசத்தோடு ஆயினும், பிசைந்து, புசித்தல் வேண்டு. அதன்பின் மோரோடு பிசைந்து, புசித்தல் வேண்டும். கறிகளை இடயிடையே தொட்டுக் கொள்ளல் வேண்டும். இலையிலும் கையிலும் பற்றறத் துடைத்துப் புசித்தபின், வெந்நீரேனும், தண்ணீரேனும் பானம் பருகல் வேண்டும்.
41. போசனம் பண்ணும் போது உமியத்தக்கதை எங்கே உமிழ்தல் வேண்டும்?
இலையின் முற்பக்கத்தை, மிதத்தி, அதன் கீழ் உமிழ்தல் வேண்டும்.
42. போசனம் பண்ணும் போது மனத்தை எதிலே இருத்துதல் வேண்டும்?
சிவபெருமானுடைய திருவடியிலே இருத்துதல் வேண்டும்.
43. போசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
எழுந்து வீட்டுக்குப் புறத்தே போய்க் கைகளைக் கழுவி, சலம் வாயிற் கொண்டு, பதினாறு தரம் இடப்புறத்திலே கொப்புளித்து, வாயையும் கைகளையும் கால்களையும் கழுவுதல் வேண்டும்.
44. உச்சிட்டத்தை எப்படி அகற்றல் வேண்டும்?
இலையை எடுத்து எறிந்துவிட்டு, கை கழுவிக்கொண்டு, உச்சிட்டத்தானத்தைக் கோமயஞ் சேர்ந்த சலந்தெளித்து மெழுகிப் புறத்தே போய்க் கழுவிவிட்டுப் பின்னும் அந்தத்தானத்தில் சலந்தெளித்து விடல் வேண்டும்.
45. உச்சிட்டத்தானத்தை எப்படி மெழுகுதல் வேண்டும்?
இடையிலே கையைஎடாமலும், முன்பு தீண்டிய இடத்தை பின்பு தீண்டாமலும், புள்ளி இல்லாமலும் மெழுகுதல் வேண்டும்.
படித்தல்
46. போசனத்திற்குப் பின் யாது செய்யத்தக்கது?
உபாத்தியாயர் இடத்தே கல்வி கற்கத்தக்கது.
இரவிற் செய்யுங் கருமம்
47. சூரியன் அஸ்தமிக்கும் போது யாது செய்தல் வேண்டும்?
மலசல விமோசனஞ் செய்து, சௌசமும் ஆசமனமும் பண்ணி, விபூதி தரித்து, சிவபெருமானை வணங்கித் தோத்திரஞ் செய்து கொண்டு, விளக்கிலே பாடங்களைப் படித்தல் வேண்டும்.
48. அதன்பின் யாது செய்தல் வேண்டும்?
போசனஞ் செய்து, நூறு தரம் உலாவி, சிறிது நேரஞ் சென்றபின், சயனித்தல் வேண்டும்.
49. எப்படிச் சயனித்தல் வேண்டும்?
கிழகே ஆயினும், மேற்கே ஆயினும் தலைவைட்த், சிவபெருமானைச் சிந்த்தித்துக் கொண்டு வலக்கை மேலாகச் சயனித்தல் வேண்டும். வடகே தலை வைத்தல் ஆகாது.
50. எப்போது எழுந்து விடல் வேண்டும்?
சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே எழுந்துவிடல் வேண்டும்.
-----------------------------------------------------------
5. சிவாலய தரிசன இயல்
1. சிவபெருமானை வழிபடுதற்கு உரிய முக்கிய ஸ்தானம் யாது?
திருக்கோயில்.
2. திருக்கோயிலுக்கு எப்படிப் போதல் வேண்டும்?
ஸ்தானஞ் செய்து தோய்த்துலர்ந்த வஸ்திரந்தரித்து, விபூதி இட்டுக்கொண்டு, போதல் வேண்டும்.
3. திருக்கோயிலுக்குச் சமீபித்த உடனே யாது செய்தல் வேண்டும்?
தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தைத் தரிசித்து, இரண்டு கைகளையுஞ் சிரசிலே குவித்து, சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு, உள்ளே போதல் வேண்டும்.
4. திருக்கோயிலின் உள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?
பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
5. கிழக்கு நோக்கிய சந்நிதானத்திலும், மேற்கு நோக்கிய சந்நிதானத்திலும், எந்தத் திக்கிலே தலைவைத்து நம்ஸ்காரம் பண்ணல் வேண்டும்?
வடக்கே தலைவைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
6. தெற்கு நோக்கிய சந்நிதானத்திலும், வடக்கு நோக்கிய சந்நிதானத்திலும், எந்தத் திக்கிலே தலைவைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?
கிழக்கே தலை வைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
7. எந்த திக்குக்களிலே கால் நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது?
கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது.
8. ஆடவர்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?
அட்டாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
9. அட்டாங்க நமஸ்காரமாவது யாது?
தலை, கை இரண்டு, செவி இரண்டு, மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு அவயவமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.
10. பெண்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?
பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
11. பஞ்சாங்க நமஸ்காரமாவது யாது?
தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு என்னும் ஐந்து அவயவமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.
12. நமஸ்காரம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?
மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும் பண்ணல் வேண்டும். ஒருதரம், இருதரம் பண்ணுதல் குற்றம்.
13. நமஸ்காரம் பண்ணியபின் யாது செய்தல் வேண்டும்?
பிரதக்ஷ?ணம்(வலம் வருதல்) பண்ணல் வேண்டும்.
14. எப்படி பிரதக்ஷ?ணம் பன்னல் வேண்டும்?
இரண்டு கைகளையும் சிரசிலேனும் மார்பிலேனுங் குவித்து சிவநாமங்களை உச்சரித்துக்கொண்டு, கால்களை மெல்ல வைத்துப் பிரதக்ஷ?ணம் பண்ணல் வேண்டும்.
15. பிரதக்ஷ?ணம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?
மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும் பண்ணல் வேண்டும்.
16. சுவாமி சந்நிதானங்களை எந்த முறையாகத் தரிசனஞ் செய்தல் வேண்டும்?
முன் விக்கினேசுரரைத் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப் பெருமானையும் உமாதேவியாரையுந் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப் பெருமானையும் உமாதேவியாரையுந் தரிசனஞ் செய்து, விபூதி வாங்கித் தரித்துக் கொண்டு, அதன் பின் சபாபதி, தக்ஷ?ணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளைத் தரிசனஞ் செய்தல் வேண்டும்.
17. விக்னேசுரரைத் தரிசிக்கும் பொழுது யாது செய்தல் வேண்டும்?
முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக் கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து, கும்பிடல் வேண்டும்.
18. சந்நிதானங்களிலே தரிசனம் பண்ணும் பொழுதெல்லாம் யாது செய்தல் வேண்டும்?
இரண்டு கைகளையுஞ் சிரசில் ஆயினும் மார்ப்பில் ஆயினும் குவித்துக்கொண்டு, மனங் கசித்துருகத் தோத்திரஞ் செய்தல் வேண்டும்.
19. எந்தக் காலத்தில் சுவாமி தரிசனஞ் செய்யல் ஆகாது?
அபிஷேகம், நிவேதனம் முதலியவை நடக்கும் பொழுது தரிசனஞ் செய்யல் ஆகாது.
20. அபிஷேக காலத்தில் பிரதக்ஷ?ண நமஸ்காரங்களும் பண்ணல் ஆகாதா?
அப்பொழுது உட்பிரகாரத்திலே பண்ணல் ஆகாது.
21. தரிசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
சண்டேசுரர் சந்நிதியை அடைந்து கும்பிட்டு, மூன்று முறை கை கொட்டி, சிவதரிசன பலத்தைத் தரும் பொருட்டுப் பிரார்த்தித்தல் வேண்டும்.
22. சண்டேசுர தரிசனத்தின் பின் யாது செய்தல் வேண்டும்?
சிவசந்நிதானத்தை அடைந்து, நமஸ்காரம் பண்ணி, இருந்து, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தில் இயன்ற உருச்செபித்துக் கொண்டு, எழுந்து, வீட்டுக்குப் போதல் வேண்டும்.
23. நித்தியமும் நியமமாக ஆலய தரிசனஞ் செய்ய இயலாதவர் யாது செய்தல் வேண்டும்?
சோமவாரம், மங்களவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், பெளர்ணிமை, அமாவாசை, திருவாதிரை, கார்த்திகை, மாசப்பிறப்பு, சூரியகிரகணம், சந்திர கிரகணம், சிவராத்திரி, நவராத்திரி முதலிய புண்ணிய காலங்களிலாயினும் தரிசனஞ் செய்தல் வேண்டும்.
24. திருக்கோயிலிலே செய்யத் தகாத குற்றங்கள் யாவை?
ஆசாரம் இல்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சில் உமிழ்தல், மலசலங் கழித்தல், மூக்குநீர் சிந்துதல், ஆசனத்து இருத்தல், சயனித்தல், காலை நீட்டிக் கொண்டு இருத்தல், மயிர் கோதி முடித்தல், சூதாடல், பாக்கு வெற்றிலை உண்டல், சிரசிலே வஸ்திரந் தரித்துக்கொள்ளுதல், தோளிலே உத்திரீயம் இட்டுக் கொள்ளுதல், சட்டை இட்டுக் கொள்ளுதல், விக்கிரகத்தைத் தொடுதல், நிருமாலியத்தைக் (பூசித்துக் கழித்த பொருள்) கடத்தல், நிருமாலியத்தை மிதித்தல், தூபி துசத்தம்பம் பலிபீடம் விக்கிரகம் என்னும் இவைகளின் நிழலை மிதித்தல், வீண் வார்த்தை பேசல், சிரித்தல், சண்டை இடுதல் விளையாடுதல், சுவாமிக்கும் பலிபீடத்துக்குங் குறுக்கே போதல் முதலியவைகளாம்.
---------------------------------------------------
6. தமிழ் வேத இயல்
1. சைவசமயிகள் ஓத வேண்டிய தமிழ் வேதங்கள் எவை?
தேவாரம், திருவாசகம் என்னும் இரண்டுமாம்.
2. தேவாரஞ் செய்தருளினவர் யாவர்?
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவர்.
3. திருவாசகஞ் செய்தருளினவர் யாவர்?
மாணிக்கவாசக சுவாமிகள்.
4. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?
சோழநாட்டில் உள்ள சீர்காழியிலே வைதிகப் பிராமண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்.
5. திருநாவுக்கரசு நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?
திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாமூரிலே வேளாளர் குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்.
6. சுந்தரமூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?
திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரிலே சிவப்பிராமண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்.
7. மாணிக்கவாசக சுவாமிகள் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?
பாண்டி நாட்டில் உள்ள திருவாதவூரிலே அமாத்தியப் பிராமண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்.
8. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய நால்வரும் எவ்வாறு பெயர் பெறுவார்கள்?
சைவ சமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்.
9. யாது காரணத்தினால் இவர்கள் சைவசமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்?
பல அற்புதங்களைக் கொண்டு சைவசமயமே மெய்ச்சமயம் என்று தாபித்தபடியினாலே சைவசமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்.
10. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?
(1) மூன்றாம் வயசிலே உமாதேவியார் கறந்து பொற் கிண்ணத்தில் ஊட்டிய திருமுலைப்பாலை உண்டது.
(2) சிவபெருமானிடத்திலே பொற்றாளமும், முத்துப் பல்லக்கும், முத்துச் சின்னமும், முத்துக் குடையும், முத்துப் பந்தளும், உலவாக்கிழியும், படிக்காசும் பெற்றது.
(3) வேதாரணியத்திலே வேதங்களினாலே பூட்டப் பட்டுத் திருநாவுக்கரசு நாயனாருடைய திருப்பதிகத்தினாலே திறக்கப்பட்ட திருக்கதவு அடைக்கப்பாடினது.
(4) பாலை நிலத்தை நெய்தல் நிலம் ஆகும்படி பாடினது.
(5) பாண்டியனுக்குக் கூனையுஞ் சுரத்தையும் போக்கினது.
(6) சமணர்கள் எதிரே தேவாரத் திருவேட்டை அக்கினியிலே போட்டுப் பச்சையாக எடுத்தது.
(7) வைகையாற்றிலே திருவேட்டைப் போட்டு எதிர் ஏறும்படி செய்தது.
(8) புத்த நந்தியுடைய தலையிலே இடி இடிக்கச் செய்தது.
(9) ஆற்றிலே தாமும் அடியார்களும் ஏறிய ஓடத்தைத் திருப்பதிகத்தினாலே கரை சேர்த்தது.
(10)ஆண் பனைகளைப் பெண் பனைகள் ஆக்கினது.
(11) விஷத்தினால் இறந்த செட்டியை உயிர்ப்பித்தது.
(12) விஷத்தினால் இறந்த பெண்ணினுடைய எலும்பைப் பெண் ஆக்கினது.
(13) தமது திருக்கல்யாணம் தரிசிக்க வந்தவர்கள் எல்லாரையுந் தம்மோடு அக்கினியிலே புகுவித்து முத்தியிலே சேர்த்தது.
11. திருநாவுக்கரசு நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?
(1) சமணர்கள் ஏழு நாள் சுண்ணாம்பறையிலே பூட்டப்பட்டு இருந்தும் வேவாது பிழைத்தது.
(2) சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டுஞ் சாவாது பிழைத்தது.
(3) சமணர்கள் விடுத்த யானையினால் வலஞ் செய்து வணங்கப்பட்டது.
(4) சமணர்கள் கல்லிலே சேர்த்துக் கட்டிச் சமுத்திரத்திலே இடவும் அக்கல்லே தோணியாகக் கரை ஏறினது.
(5) சிவபெருமானிடத்திலே படிக்காசு பெற்றது.
(6) வேதாரணியத்திலே வேதங்களாலே பூட்டப்பட்ட திருக்கதவு திறக்கப் பாடினது.
(7) விஷத்தினாலே இறந்த பிராமணப் பிள்ளையை உயிர்ப்பித்தது.
(8) காசிக்கு அப்பால் ஒரு தடாகத்தின் உள்ளே முழுகித் திருவையாற்றில் ஒரு வாவின் மேலே தோன்றி கரை ஏறினது.
12. சுந்தரமூர்த்தி நாயனாரிடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?
(1) செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது.
(2) சிவபெருமான் கொடுத்தருளிய பன்னிராயிரம் பொன்னை விருத்தாசலத்தில் உள்ள ஆற்றில் போட்டுத் திருவாரூரில் உள்ள குளத்திலே எடுத்தது.
(3) காவேரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.
(4) முதலை விழுங்கிய பிராமணப் பிள்ளையை அம்முதலை வாயினின்றும் அழைத்துக் கொடுத்தது.
(5) வெள்ளை யானையில் ஏறிக்கொண்டு திருக்கைலாசத்துக்கு எழுந்தருளியது.
13. மாணிக்கவாசக சுவாமிகளிடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?
(1) சிவபெருமானே நரியைக் குதிரை ஆக்கிக்கொண்டு வரும்படிக்கும், மண் சுமந்து அடி படும்படிக்கும் பெற்றுக் கொண்டது.
(2) புத்தர்களைத் தருக்கத்தில் வென்று ஊமைகள் ஆக்கிப் பின் ஊமை தீர்த்துச் சைவர்கள் ஆக்கியது.
(3) பிறவி தொடுத்து ஊமையாய் இருந்த ஒரு பெண்ணை ஊமை தீர்த்துப் புத்தர்கள் வினாவிய வினாக்களுக்கு விடை சொல்லும்படி செய்தது.
(4) தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும்படி பெற்றுக்கொண்டது.
(5) எல்லாருங் காணக் கனகசபையின் உள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.
14. இந்த அற்புதங்களினாலே யாது விளங்குகின்றது?
சைவசமயமே மெய்ச்சமயம் என்பது நன்றாக விளங்குகின்றது.
15. தமிழ் வேதம் ஓதுதற்கு யோக்கியர் யாவர்?
மதுபானமும் மாமிச போசனமும் இல்லாதவராய் ஆசாரம் உடையவராய், சிவதீ?க்ஷ பெற்றவராய் உள்ளவர்.
16. தமிழ் வேதத்தை எப்படி ஓதல் வேண்டும்?
சுத்தி செய்யப்பட்ட இடத்தில் பீடத்தின் மேலே தமிழ் வேத புத்தகத்தை வைத்து, அருச்சித்து, நமஸ்காரஞ் செய்து, இருந்துகொண்டு, அன்புடனே ஓதுதல் வேண்டும், புத்தகத்தை நிலத்திலேனும், ஆசனத்திலேனும், படுக்கையிலேனும், மடியிலேனும், வைக்கல் ஆகாது.
17. தமிழ் வேதத்தை அன்புடனே நியமமாக ஓதினவர் யாது பெறுவர்?
சிவபெருமானுடைய திருவடிக் கீழ்ப் பேரின்பத்தைத் அநுபவிப்பர்.
திருச்சிற்றம்பலம்
சைவவினாவிடை முதற்புத்தகம் முற்றுப்பெற்றது.
------------------------------------------------